இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்: அசத்தும் இந்திய வீராங்கனைகள்
- IndiaGlitz, [Sunday,April 08 2018]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில்
ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ பெண்கள் பிரிவில் மீராபாய் சானுவும், 53 கிலோ பெண்கள் பிரிவில் சஞ்சிதா பானுவும், 77 கிலோ ஆண்கள் பிரிவில் சதீஷ்குமாரும், 85 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் வெங்கட் ராகுலும் தங்கம் வென்றுள்ளனர். எனவே நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா இன்று ஒரே நாளில் இரண்டு தங்கம் பெற்று அசத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் என்ற வீராங்கனை பளுதூக்கும் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் இன்று தங்கம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 222 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
மேலும் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் என்ற வீராங்கனை 10 மீ பிரிவில் தங்கம் வென்று சாதனை புரிந்தார். அதுமட்டுமின்றி இந்தியாவின் ஹினா சித்து என்பவர் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ பிரிவில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இன்று கிடைத்த இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்கள் காரணமாக இந்தியா மொத்தம் 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் உள்ளது.