தனுஷின் 'D50' படத்தில் இணைந்த மேலும் இரு பிரபலங்கள்.. அனிருத்துக்கு பதில் இவரா?

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் 50 வது படமான ‘D50’ திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதில் பிரபல இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்து இயக்கும் 50 வது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ’பா பாண்டி’ திரைப்படத்திற்கு பின்னர் தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் நாயகன் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஏஆர் ரகுமானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர்தான் இந்த படத்தை இசையமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் இணைந்து உள்ளதாகவும் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக வடசென்னை பின்னணியை கொண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் இந்த படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.