இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முன் ஓபிஎஸ் தரப்பின் வாதங்கள்
- IndiaGlitz, [Wednesday,March 22 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணியாக உடைந்தது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிடுவதால் இருதரப்பினர்களும் இரட்டை இலை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் சற்றுமுன்னர் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை இன்று வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் முன் ஓபிஎஸ் தரப்பினரின் வாதம் பின்வருமாறு:
சசிகலாவின் பொதுச் செயலாளர் தேர்வு கேள்விக்குறியாக இருக்கும் போது அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல.
இரட்டை இலை சின்னத்தை அளிப்பது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம், எனவே அவர்களுக்கு சின்னம் வழங்கக்கூடாது.
சசிகலா அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது.
தண்டனைக்குள்ளான சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக அமைந்துவிடும்.