இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரமா? டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு
- IndiaGlitz, [Monday,April 17 2017]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. இதன் காரணமாக அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு அணியினர்களும் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்து வரும் நிலையில் இரட்டை இலை சின்னதை பெற்று தர தினகரனிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் டிடிவி தினகரனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் ரூ.1.30 கோடியை டெல்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்திற்காக சுமார் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர, சசிகலா அணியிடம் இருந்து அதாவது டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.