தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலி!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் 102 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தமிழகம் முழுவதும் மொத்தம் 411 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று மட்டும் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் திடீரென பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் தலைமையாசிரியர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி மத மாநாட்டுக்குச் சென்று வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்
அதேபோல் சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 35 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த இளைஞரும் இன்று மரணமடைந்தார். இருப்பினும் இவர்கள் இருவரது ரத்தம் மாதிரியின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அந்த முடிவுகள் வந்தால் மட்டுமே இவர்கள் கொரோனாவால் இறந்தார்களா? என்பதை உறுதி முடியும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்