ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்குச் சென்ற இரட்டைச் சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலூரை அடுத்த காட்பாடி என்ற பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு பத்மபிரியா, ஹரிப்பிரியா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். 17 வயதான இருவரும் பிளஸ் 1 படித்து முடித்துவிட்டு பிளஸ் டூ வகுப்பில் செல்வதற்காக காத்திருந்த நிலையில் இருவருக்கும் அவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து ஆன்லைனில் கடந்த சில நாட்களாக பாடம் எடுத்து வருவதாக தெரிகிறது

இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு மொட்டை மாடியில் உள்ள அறையில் இருவரும் ஆன்லைன் வகுப்பிற்காக சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் கீழே இறங்கி வரவில்லை என்பதால் அவர்களுடைய தந்தை சந்தேகம் அடைந்து மேலே பார்க்க சென்றார். அப்போது அந்த அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது 2 சகோதரிகளும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் உடனடியாக வந்து கதவை உடைத்து இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரட்டை சகோதரிகளுக்கும் அவர்களுடைய தாயாருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும் அவர்களுடைய தாயார் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? என்பது குறித்து பள்ளியிலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது