வயநாடு நிலச்சரிவு..  அரசு அதிகாரிகளுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இந்த நிலச்சரிவில் அந்த பகுதிகளில் குடியிருந்த சுமார் 500 குடும்பங்களில் உள்ள 1000 பேர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்தவுடன் மீட்பு படையினர், காவல்துறையினர், வனத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படை, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்டு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை 60 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ’வயநாடு நிலச்சரிவு சோக செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன், எனது எண்ணம் பிரார்த்தனைகள் துயரம் அடைந்த குடும்பத்தினருடன் தான் உள்ளன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.