விஜய் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு நடக்க போகிறதா? தமிழக அரசியலில் பரபரப்பு..!
- IndiaGlitz, [Tuesday,December 10 2024]
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக திருவிழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இருவரும் மாறி மாறி மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள ஒரு தலைவரே, ஆளும் கட்சியை விமர்சனம் செய்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நேற்று ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி, தனது வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலமாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நடந்தால், கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டின் தேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாம திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே எதிரெதிர் அணியில் இருந்த நிலையில், முதல் முறையாக திமுகவுக்கு எதிராக விஜய் தலைமையிலான கூட்டணி இருக்கும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.