கணவர் இறந்த செய்தியை கண்ணீருடன் டிவியில் வாசித்த செய்தியாளர்

  • IndiaGlitz, [Sunday,April 09 2017]

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் ஒரு பெண், தனது கணவர் இறந்த செய்தியையே பிரேக்கிங் செய்தியாக வாசித்த உருக்கமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் டிவி ஒன்றில் செய்தி வாசிக்கும் சுப்ரீத் கவுர் என்ற 28 வயது பெண், சமீபத்தில் வழக்கம்போல செய்தி வாசித்து கொண்டிருந்தார். அப்போது வாகன விபத்து நடந்ததாகவும், அதில் ஐந்து பேர் பலியானதாகவும் செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியை வாசிக்கும்படி செய்தியாசிரியர் சுப்ரீத் கவுருக்கு செய்கை மூலம் பணித்தார்.

அந்த செய்தியை பார்த்ததும் அது தனது கணவர் சென்ற கார் என்றும் இறந்த ஐந்து பேர்களில் தனது கணவரும் ஒருவர் என்பதையும் சுப்ரீத் கவுர் புரிந்து கொண்டார்.உடனே கண்ணீர் அவர் கண்களை எட்டிப்பார்த்தது. இருப்பினும் மனதில் சோகத்தை அடக்கி கொண்டு அந்த செய்தியை வாசித்தார். பின்னர் செய்தி வாசித்து முடித்தவுடன் உறவினர்கள் மூலம் இறந்தது தனது கணவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டு கதறி அழுதார். சக ஊழியர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறியபோது, 'விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.