கந்துவட்டி கொடுமையால் கடுமையாக பாதிகப்பட்ட சின்னத்திரை நடிகை புகார்
- IndiaGlitz, [Thursday,October 26 2017]
நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு பின்னர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாத பலர் தற்போது தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கந்துவட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல்நிலையங்களில் கந்துவட்டி குறித்த புகார்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் தொலைக்காட்சி துணைநடிகை ஆனந்தி என்பவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கந்துவட்டியால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சகோதரர் கொலை செய்யப்பட்டதாகவும் திடுக் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை ஆனந்தியின் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சின்னத்திரையில் துணை நடிகையாக வேலை பார்க்கும் நான், என் தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி, அவர் மகன் தினேஷ் என்ற தேசய்யா ஆகியோரிடம் 2014-ம் ஆண்டு 5 லட்சம் மூன்று தவணையாக 2 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் என வாங்கினேன். இவற்றில் வட்டியாக ரூ. 1,80,000 செலுத்தியுள்ளேன். மீதித் தொகைக்கு அசல் மற்றும் வட்டிக்கு என் அம்மாவின் வீட்டை ராணிப்பேட்டை காவல் நிலையம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர். பிறகு என்னையும் என் கணவரையும் மிரட்டி ராணிப்பேட்டை ஐ.ஓ.பி வங்கியின் மூன்று காசோலையில் கையெழுத்து வாங்கிச் சென்றுவிட்டனர். பின்னர் அந்தக் காசோலையில் 31 லட்சம் எனத் தனித்தனியாக எழுதிக்கொண்டனர். பின்னர், வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டதாகவும் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.
பின்னர், என் அம்மா சரசாவிடம் வீட்டை எழுதி வாங்கும் நோக்கத்தில் பல தொந்தரவுகள் செய்ததால் என் சகோதரர் அருண்குமாரை மிரட்டி அக்ரிமென்ட் வாங்க தினேஷூம் வித்தியாசாகர் என்பவரும் அழைத்துச் சென்றனர். பின்னர் விபத்தில் அருண்குமார் இறந்துவிட்டதாக அவரது உடலை எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். என் அண்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களிடம் முறையாக வட்டியும் பெற்று பின்னர் குறையும் தொகைக்கு என் தாயாரின் வீட்டையும், காவல் நிலையத்தின் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர். ரங்கநாயகி, தினேஷ் ஆகியோர் ஆசைவார்த்தை கூறி குறைவான வட்டி எனப் பணம் கொடுத்து பின்னர், கந்துவட்டி வசூல் செய்கிறார்கள். இந்த இருவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும். என்னிடமிருந்து வாங்கிய வங்கிக் காசோலையைக் திரும்பப் பெற்றுத் தரவும் பொய் வழக்கில் எங்களை விடுவிடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.