ரஜினி ஆஜராவதற்கு விலக்கு? விசாரணை ஆணையம் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

கடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் நூறாவது நாள் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதனையடுத்து கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல கடந்த ஆண்டு ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியின் போது துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று தெரிவித்தார். அந்த சமூக விரோதி யார் என்பதை ரஜினிகாந்த் தெளிவாகக் கூற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினார்

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையம் இதுவரை 18 கட்டங்களாக விசாரணையை முடித்து தற்போது 19வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும் ரஜினிகாந்த் உள்பட 31 பேர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் நேரில் விசாரணை செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டால் அதற்கு தான் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை ஆணையம் இன்று அதிரடியாக முடிவெடுக்கும் என கூறப்படுகிறது