துருக்கி நிலநடுக்கத்தில் 1300 பேர் பலி: உடனடி உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!
- IndiaGlitz, [Monday,February 06 2023]
துருக்கியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 1300 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1300 பேர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பலி எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாகவும் சிரியா உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான அகதிகள் வசிக்கும் பகுதியில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் சுமார் 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து மருத்துவ குழுக்கள் மற்றும் நிவாரண பொருட்களை துருக்கிக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களை கொண்ட இரண்டு மருத்துவ குழுக்கள் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இந்தியாவிலிருந்து செல்ல இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அத்தியாவசிய மருந்து பொருட்களையும் மருத்துவ குழுவினர் எடுத்துச் செல்வார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.