வீலிங் செய்யும்போது ஏற்பட்ட விபரீதம்.. விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்..!

  • IndiaGlitz, [Monday,September 18 2023]

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயற்சி செய்தார், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்ய முயற்சி செய்தார். அப்போது அவரது வாகனம் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தூக்கி வீசப்பட்டது. சாலையோரம் இருந்த புதரில் தூக்கி வீசப்பட்ட டிடிஎப் வாசன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாசன் ஏற்கனவே ஆபத்தான மற்றும் அதிவேக வாகன சாகசம் செய்து இளைஞர்களை வழிநடத்துகிறார் என்ற விமர்சனம் இருந்தது. தற்போது அவர் விபத்தில் சிக்கி இருந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வரும் பொழுது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விரைவில் அவரிடம் விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது என்பதும், இந்த விபத்தில் காருக்கு முன் பைக்கில் சென்ற நபர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.