ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?
- IndiaGlitz, [Tuesday,March 14 2017]
பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை. ஆனால் முதல்முறையாக தமிழகத்தில் ஆளுங்கட்சியின் ஊடகங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியின் தொலைக்காட்சியிலும், ஆளுங்கட்சியின் நாளிதழ்களிலும் பெரும்பாலும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், முதல்வர் பற்றிய மிகக்குறைவாகவே இருப்பதாகவும் அதிமுக தொண்டர்களே கூறி வருகின்றனர்
அதேபோல் அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் டிடிவி தினகரனின் பேட்டிகள், அறிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசு விழாவாக இருந்தாலும் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியின் செய்திகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவை அடுத்து பன்னீர்செல்வம் ஒரு சக்திமிகுந்த தலைவராக உருவாகியது போல் இன்னொரு தலைவராக உருவாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அதிமுக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஒருவேளை வெற்றி பெற்றால் எடப்பாடி பழநிச்சாமியின் முதல்வர் பதவி தப்புமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் இதுவும் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்