தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்
- IndiaGlitz, [Wednesday,April 26 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது.
இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவின் பேனர்களும் போஸ்டர்களுமே பெருமளவில் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் நேற்று தினகரன் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் இன்று காலை முதல் அதிமுக அலுவலகத்தில் சசிகலாவின் அனைத்து பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி சிறையில் தினகரனும், பெங்களூர் சிறையில் சசிகலாவும் இருக்கின்றனர். சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இந்த இருவருக்கும் கிடைத்த நிலையை கண்டு அஞ்சி, அரசியல் தலையீட்டில் இருந்து ஒதுங்கி உள்ளனர். எனவே நீண்ட வருடங்களுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத ஒரு புத்துணர்ச்சி அதிமுக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.