யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது சரியா? டிடிவி தினகரன் விளக்கம்..!
- IndiaGlitz, [Sunday,August 20 2023]
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 20 வயது குறைவான ஒருவர் காலில் ரஜினிகாந்த் விழுந்தது தவறு என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஒரு இந்து மத துறவியின் காலில் விழுந்தது தவறு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது ’யோகி ஆதித்யநாத் அவர்கள் ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல, அவர் ஒரு துறவி. நான் 1999ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எம்பியாக இருந்த அவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு.
அவர் முற்றும் துறந்த துறவி, துறவி இடம் ஆசிர்வாதம் வாங்குவது எந்த தவறும் இல்லை. மேலும் ஒரு துறவி அரசியலுக்கு வந்தது தவறும் இல்லை, அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சரானாலும் அவர் துறவி தான். அதேபோல் முற்றும் துறந்த துறவி என்று வரும்போது வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது, அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது தவறு இல்லை.
நாம் யோகி ஆதித்யநாத் அவர்களை அரசியல்வாதியாக பார்த்திருக்கலாம், ஆனால் ரஜினிகாந்த் அவரை துறவியாக தான் பார்த்திருப்பார். எனவே அது குறித்து நாம் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.