டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் கைது. டெல்லி போலீசாரின் அடுத்த அதிரடி
- IndiaGlitz, [Friday,April 28 2017]
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் கைப்பற்றும் நோக்கத்துடன் புரோக்கர் சுகேஷ் மூலம் ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவரையும் எடுத்து டெல்லி போலிசார், சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினகரன், சுகேஷுக்கு லஞ்சமாக கொடுத்த பணம் ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்ததால், ஹவாலை கும்பலை பிடிப்பதுதான் டெல்லி போலிசாரின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹவாலா ஏஜெண்ட் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும், அந்த உண்மைகள் தினகரனின் வழக்கை மேலும் வலுப்படுத்தும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.