தமிழ் நடிகருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி கொடுத்த டிடிவி தினகரன்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே. அமமுகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு எந்தவிதமான பதவியும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆம், நடிகர் ரஞ்சித் அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரனும், அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித்தும் அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன், முன்னாள் எம்எல்ஏ, வி.எஸ்.அருள் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் விசாலாட்சியும், மாணவரணி செயலாளராக பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவில் இருந்து நடிகர் ரஞ்சித் பாஜகவில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி ஏற்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அந்த கட்சியில் பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.