விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றியா? கமலுக்கு தினகரன் கண்டனம்:

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

சமீபத்தில் முடிவடைந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் அவருடைய வெற்றி பணத்தால் பெற்ற வெற்றி என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் உலகநாயகன் கமல்ஹாசன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கூறியபோது 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூடச் சொல்லமாட்டேன்.  ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று கூறிய கமல்ஹாசனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆர்.கே. நகர் தொகுதி மக்களை இழிவுபடுத்தும் வகையில் கமல் கருத்து கூறியுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.