நீதிமன்றம் வரும்போது ஆவேசமான டிடிஎப் வாசன்.. ஜாமீன் மனு மீது அதிரடி உத்தரவு..!
- IndiaGlitz, [Thursday,May 30 2024]
ஜாமீன் கோரிய டிடிஎப் வாசனின் மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முன்னதாக டிடிஎப் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ‘டிடிஎப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்க உள்ளார் என்றும், வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம் என்றும் தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகிய சமூக சேவைகளை செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும் டிடிஎஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை, டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறிய வழக்கறிஞர்
சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? எனவும் கூறினார்.
மேலும் காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாசனுக்கு முதுகு வலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும் என்றும் வரும் 4ஆம் தேதி சினிமா பட ஷூட்டிங் உள்ளதால் நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வாதாடினார்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் டிடிஎஃப் வாசன் வந்தபோது, ‘வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டார்.