டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து.. 'மஞ்சள் வீரன்' அவ்வளவுதானா?
- IndiaGlitz, [Saturday,October 07 2023]
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் டிடிஎப் வாசன் சென்று கொண்டிருக்கும்போது வீலிங் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு லேசான காயம் தான் ஏற்பட்டது என்றாலும் அவர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதாக கைது செய்யப்பட்டார்.
இரண்டு முறை அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நீதிபதி மிகவும் காட்டமாக டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும் அவரது பைக்கை எரித்து விட வேண்டும் என்றும் இது போன்ற ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதால் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவருடைய ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு அதாவது 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் இனிமேல் ஜாமீன் பெற்று அல்லது வழக்கில் இருந்து வெளியே வந்தாலும் கூட பத்து ஆண்டுகளுக்கு எந்த வித வாகனத்தையும் ஓட்ட முடியாது.
இந்த நிலையில் டிடிஎப் வாசன், ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் பைக் சாகச வீரராக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இனிமேல் அந்த படத்தை அவர் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் ஒரே ஒரு தவறால் டி.டி.எப் வாசனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.