T.S.பாலையாவால் கதாநாயகனான எம்.ஜி.ஆர்... விவரிக்கும் ஜெய் பாலையா கணேஷ்
- IndiaGlitz, [Wednesday,October 02 2024]
பழம்பெரும் நடிகர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் T.S.பாலையா. சதிலீலாவதி என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள் இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்த திரைப்படங்கள்.
T.S.பாலையாவின் இளைய மகன் ஜெய் பாலையா, Dubbibng Artist ஆகவும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆகவும், மற்றும் துணை நடிகராகவும் கலைத்துறையில் பயணிப்பவர். தனது தகப்பனார் T.S.பாலையா குறித்தும், அவர் குறித்தும் பல சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்பாவுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. சினிமாவில் நடிக்க ஆசை. அதனால் சொந்த ஊரை விட்டு வந்துவிட்டார். அதன் பின் ஹோட்டல், சர்க்கஸ் கம்பெனி என பல இடங்களில் வேலை செய்துள்ளார். அங்கு கிடைத்த தொடர்பு மூலமாகத்தான் நாடகத்திற்கு சென்று பின் சினிமாவிற்கு வந்தார்.
சதிலீலாவதி என்ற படத்தில் அப்பா T.S.பாலையா வில்லன் கதாபாத்திரத்திலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் துணை நடிகராவும் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த காலத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
அதன்பின்பு, ராஜகுமாரி படத்தில் நடிக்க அப்பாவிற்கு வாய்ப்பு வந்தது, அப்பா நான் வில்லனாக நடிக்கிறேன், ஹீரோவுக்கு ராமச்சந்திரன் என்பவரை போடுங்கள் என்று சொல்லியுள்ளார். இதை பின்னாளில் புரட்சித்தலைவர் நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் நான் நடிகன் ஆவதற்கு T.S.பாலையா ஒரு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
கதை எழுதுபவர்கள் பயங்கர வில்லன் பாலையா என்றுதான் எழுதுவார்கள். தியாகராஜ பாகவதர், எம்.ஜி. ஆர் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தவர். அதனாலேயே மக்கள் அவரை திட்டுவார்கள், கடும் சாபம் கொடுப்பார்கள்.நடிகர் நம்பியாரே ஒரு முறை உங்கள் அப்பாவை திட்டுவதுபோல் என்னையும் மக்கள் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.
ஒரு மகா நடிகனின் மகனாக பிறந்தது என் பாக்யம். பெருந்தலைவர் காமராஜர் என் அப்பா மீது மிகுந்த அன்பு கொண்டவர். அப்பா ஒரு நாள் ஐயா காமராஜரிடம் நீங்கள் அவசியம் வீட்டிற்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஐயாவும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை எல்லாம் ஆசிர்வதித்து சென்றார்.
திரைத்தேன் இசை குழு என்று ஒன்றை தொடங்கி அதன் மூலமாக என் திறமைகளை மக்கள் முன் காட்டத்தொடங்கினேன். எனக்கு பாடுவதில்தான் அதிக ஆசை.
என இவ்வாறு பேட்டியின் முதல் பகுதியில் பேசியுள்ளார்.