ரஜினி-தனுஷ்-ரஞ்சித் படத்தின் வதந்திகளும் உண்மை நிலவரமும்
- IndiaGlitz, [Thursday,September 01 2016]
பொதுவாக ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனாலே அந்த படத்தின் ஹீரோவும், இயக்குனரும் மீண்டும் இணைந்து பணிபுரிவது என்பது கோலிவுட்டில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். திருப்பாச்சி, சிவகாசி என பேரரசு இயக்கத்தில் விஜய்யும், வேதாளம், அஜித் 57 என சிவா இயக்கத்தில் அஜித்தும், 'சிங்கம்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் ஹரி இயக்கத்தில் சூர்யாவும் என பல உதாரணங்கள் இதற்கு கூறலாம்.
இந்நிலையில் 'கபாலி' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ரஜினி-ரஞ்சித் இணையும் படம் குறித்தும் அந்த படத்தை தனுஷ் தயாரிப்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் ஆதாரமின்றி இணணயதளங்களில் பரவி வருகின்றன்.
தனுஷ் ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தையிடம் புகார் கூறியதாகவும், நடிகையின் தொடர்பில் இருந்து தனுஷை விடுவிக்கவே கண்டிஷனுடன் தனுஷின் பேனருக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்ததாகவும் கூறப்படும் ஒரு வதந்தி.
மேலும் சர்ச்சைக்குரிய அந்த நடிகையையே இந்த படத்தின் நாயகியாக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கண்டிஷன் போட்டதாகவும், அப்பொழுதுதான் இருவரையும் அவர் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்று கூறியதாகவும் இன்னொரு வதந்தி.
தனுஷின் தயாரிப்பு நிறுவனம் பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், அதனால் மருமகனுக்கு தோள் கொடுக்கவே ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்ததாகவும் இன்னொரு வதந்தி. இவ்வளவுக்கு தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கிச் சட்டை, நானும் ரெளடிதான், எதிர்நீச்சல், காக்கா முட்டை, விசாரணை ஆகியவை மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கபாலி' படத்தால் கலைப்புலி தாணு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், அந்த பணம் தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கே சென்றால் நல்லது என்பதால் தனுஷூக்கு கால்ஷீட் கொடுத்ததாகவும் இன்னொரு வதந்தி
இவ்வாறு இஷ்டத்திற்கு ஆன்லைன் எழுத்தாளர்கள் தங்களது கற்பனையை கட்டவிழ்த்துவிட்டு எழுதி தள்ளுகின்றனர்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? உண்மையில் ரஞ்சித்தின் புரட்சிகரமான கருத்துக்களுடன் கூடிய இயக்கமும், 'கபாலி' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியுமே ரஜினியை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது.
அதேபோல் தனுஷ் தயாரித்த அனைத்து படங்களுமே நல்ல வெற்றிதான். அவரது நிறுவனம் ரஜினியின் கால்ஷீட் இல்லாவிட்டாலும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் அளவுக்கு ஸ்ட்ராங்கான பொருளாதார நிலையில்தான் உள்ளது. மேலும் அனிருத், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர்கள் இன்று மிகப்பெரிய வெற்றியாளர்களாக இருப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்களில் தனுஷூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை நிலை இவ்வாறிருக்க மீண்டும் ஒருநல்ல கூட்டணி இணைந்துள்ளது இன்னும் ஒரு சாதனையை ஏற்படுத்தவே என்ற பாசிட்டிவ் மனதுடன் இந்த கூட்டணியை நினைக்க வேண்டுமே தவிர தேவையற்ற வதந்தியை கிளப்புவது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்களுடைய மனசாட்சியே கேட்டுக்கொள்ளட்டும்.