ட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து அகமதாபாத்திற்கு நேரடியாக வரவிருக்கிறார் என்பதும் இன்னும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
ட்ரம்ப்பின் விமானம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 11.40 மணிக்கு வந்தடையும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. விமான நிலையத்தில் ட்ரம்ப் மற்றும் அவருடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்க இருக்கிறார். வரவேற்பில் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் நேரடியாக மொடேரா பகுதியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு செல்கிறார். இடையில் உள்ள 22 கி.மீ. தூரத்தையும் சாலை வழியாகவே கடக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்காக சாலையின் இரு மருங்கிலும் 10,000 காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர். மக்களை நேரில் பார்த்து கையசைத்தவாறே இருநாட்டு தலைவர்களும் செல்ல உள்ளனர் என்பது அப்பகுதியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
ட்ரம்ப் வருகையின் மற்றொரு முக்கிய அம்சம் அவரது வருகைக்காக செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகள். இதற்காக குஜராத் உள்துறை அமைச்சகம் சுமார் 100 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெறுமனே 3 மணி நேரம் மட்டுமே செலவழிக்க உள்ளனர். இதற்காக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ட்ரம்ப் பயணிக்கும் சாலைகளைப் புதுப்பிக்க மற்றும் செப்பணிட ரூ. 80 கோடியும், பாதுகாப்பு செலவுகளுக்கு ரூ. 12 முதல் 15 கோடியும், சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வருபவர்களின் போக்குவரத்து செலவுகளுக்கு ரூ. 7 முதல் 10 கோடியும் செலவு செய்யப் பட்டுள்ளது. அகமதாபாத் நகரத்தை அழகுப் படுத்த , பூச்செடிகளை நடவு செய்ய ரூ. 6 கோடி என நகரை அழகுப் படுத்த இதற்காக தனி செலவுத் தொகைகள் ஒதுக்கப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. இருநாட்டு தலைவர்களும் சாலைகளில் பயணிக்கும்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படவுள்ளன. கலை நிகழ்ச்சிகளுக்கு ரூ. 4 கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளன.
மேலும், அகமதாபாத்தின் இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் பகுதியில் உள்ள குடிசைகள் குடிசைகளை முற்றிலும் மறைப்பதற்காக சுவர் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சர்ச்சைகளும் கிளம்பின என்பதும் குறிப்பிடத் தக்கது.
25 ஐபிஎஸ் அதிகாரிகள், 10,000 காவலர்கள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள் போன்றோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு படை, சிறப்புப் பாதுகாப்புப் படையும் இவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மொடேரா மைதானத்தை ஒட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மொடேரா மைதானத்தை ஒட்டி ஆளில்லா விமானங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெடி குண்டு சோதனைகள் பல முறை நடத்தப் பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானத்தை அடைவதற்குள் ஒரு லட்சம் மக்கள் சாலைகளின் ஓரம் கூடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை இருநாட்டு தலைவர்களும் இணைந்தே திறந்து வைக்க உள்ளனர். மேலும், பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது அவரை கௌரவிக்கும் விதமாக ஹெடி மோடி நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அதைப் போன்றே அகமதாபாத் மைதானத்தில் ட்ரம்ப்பை கௌரவிக்கும் விதமாக, கேம் ச்சோ ட்ரம்ப் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மைதானத்தில் பல கலை நிகழ்ச்சிகளும் , பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், பின்னர் மைதானத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோர் காந்தியின் நினைவிடமான சபர்மதி ஆசிரமத்திற்கு செல்ல வுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
முன்னதாக இந்தியா வருகையை ஒட்டி அதிபர் ட்ரம்ப், “இந்தியா வருவது மிகப்பெரிய கவுரவம்” என்று தெரிவித்தது இந்தியாவிற்குப் பெருமையையும் சேர்த்து கொடுத்திருக்கிறது.
“மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்க முடியாத வரவேற்பை அளிக்கும்” என்று முன்னதாக பிரதமர் மோடி ட்ரம்புக்கு பதில் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments