கேள்விக்குறியாகி இருக்கும் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி: அமெரிக்காவில் தொடரும் இனவெறிக்கு எதிரான போராட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருவதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருவது கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிபர் தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அதிபர் ட்ரம்ப் நடைமுறை படுத்தி இருந்தார். அந்நாட்டில் தொடரும் கறுப்பினத்தவர்களின் மாற்றுக் கருத்தை சரிசெய்யும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தியதாக நியூயார் டைம்ஸ் ஊடகத்தில் ஒரு கட்டுரையும் வெளியாகி இருந்தது. ஆனால் நிலைமையை தலைகீழாகப் புரட்டிப் போடும் விதத்தில் தற்போது அமெரிக்காவில் பல பிரச்சனைகள் தலைத்தூக்க ஆரம்பித்து இருக்கின்றன.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் முதல் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் பட்டதில் இருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது உலக அளவில் அதிகமாக இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்காதான் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. இதுவரை 1,13,061 பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் நிலைமையை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் எனத் தற்போது ஜனநாயகக் கட்சியினர் நேரடியாகவே குற்றம் சுமத்த தொடங்கி விட்டனர்.
இதுமட்டுமல்லாது கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்திலும் நிலைமையை மோசமாக்கியது அதிபர் ட்ரம்ப் தான் என்று குற்றம் சாட்ட தொடங்கி இருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். எதிர்க்கட்சி மட்டுமல்லாது சில குடியரசு கட்சியினரே இந்தக் குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கி விட்டனர். முன்னாள் உள்துறை செயலாளராக இருந்த காலன் பாவெல் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் ட்ரம்பின் செயல்முறை தவறானது என்றக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். மேலும், அவர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி செல்கிறார் என்ற குற்றச் சாட்டையும் வைத்திருக்கிறார்.
நிலைமை இப்படியிருக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அதிபர் பதவி வேட்பாளராக முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனை அறிவித்து இருக்கின்றனர். இவருக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், ஜார்ஜ் ஃபிளாய்ட் விஷயத்தில் கூறிய விமர்சனக் கருத்துகள் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் போன விவகாரங்களை கையில் எடுத்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் ஜோ பிடன். பல்வேறு மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப் பாரப்பட்சத்துடன் நடந்து கொள்கிறார் என்ற கருத்தும் தற்போது வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிபர் ட்ரம்ப்பின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com