அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க விண்வெளி படையின் புதிய லோகோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த லோகோவை பலர் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். கற்பனை கதையைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரில் இதே போன்ற ஒரு லோகோ இருக்கிறது அதைத்தான் தற்போது ட்ரம்ப் வெளியிட்டுள்ளார் எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதிவில் இராணுவத் தலைவர்கள், சிறந்த வடிவமைப்பாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய லோகோ உருவாக்கப் பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அமெரிக்க ராணுவத்தின் ஆறாவது பிரிவான விண்வெளி படைக்கு இந்த புதிய லோகோவை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.

தற்போது அமெரிக்க இளைஞர்கள் இந்த லோகோவினை விமர்சிக்கும் விதமாக பல கேலிச் சித்திரங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த லோகோவை உருவாக்கியவர் கண்டிப்பாக Starfleet நிகழ்ச்சியின் ரசிகராகத்தான் இருக்க வேண்டும். Starfleet நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட லோகோவை போன்றே இந்த புதிய லோகா இருக்கிறது எனப் புதிய லோகோ குறித்து கேலியாக ட்விட் செய்துள்ளனர்.

Starfleet நிகழ்ச்சி என்பது ஒரு கற்பனையான கிரகத்தில் விண்வெளி, ஆய்வு, ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்ற பல துறைகள் செயல்படுவதாக கற்பனை செய்யப்பட்ட கதை அமைப்பினைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடராகும். இதில் பிரபல நடிகரான Trek நடித்து வருவது குறிப்பிடத் தக்கது. சில நேரங்களில் கற்பனை தொடரை உருவாக்குபவர்களால் அமெரிக்க விண்வெளி படைக்கு லோகோவை வடிவமைக்க முடியும் என்ற தொணியில் பதிவிடப் பட்ட ட்விட்டுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

Starfleet விட இதில் எதுவும் புதுமை இல்லை, இன்னொரு Starfleet இந்த உலகத்தை காக்க தனது வேலையைத் தொடங்கியுள்ளது என்ற ரீதியில் பல ட்வீட்டுக்கள் தற்போது மிகவும் வேகமாகப் பரவி வருகின்றன.