திடீரென சோஷியல் மீடியா நிறுவனம் துவங்கும் டிரம்ப்… என்ன காரணம் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,October 21 2021]
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் “ட்ரூத்“ எனும் பெயரில் புதிய சோஷியல் மீடியா நிறுவனத்தை துவங்க உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரிய தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக தக்கப் பதிலடி கொடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அதிபராக இருந்தபோது சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். அதேபோல இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது அறிக்கைகளை இதில் வெளியிட்டும் வந்தார். மேலும் அவர் வெளியிடும் பெரும்பாலான அறிக்கைகள் வெளியுறவுத்துறை தொடர்பானதாக இருக்கும். இதைத் தவிர சில வேளைகளில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான சில கருத்துகளையும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இதனால் டிரம்ப் அதிபராக இருந்தபோதே பலமுறை அவருடைய ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பதவிபோன பிறகும் இன்னும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் டிரம்பின் ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல ஜுலை மாதத்தில் இருந்து கூகுள் நிறுவனமும் டிரம்பின் சமூகவலைத் தளப்பக்கத்தை தணிக்கைக்கு உட்படுத்தி இருக்கிறது.
இப்படி தொடர்ந்து சோஷியல் மீடியா நிறுவனங்களால் சிக்கல் முளைத்துவரும் நிலையில் டிரம்ப் புதிய சோஷியல் மீடியா நிறுவனம் தொடங்கும் முடிவிற்கு வந்துள்ளார். இதுகுறித்து மின்னஞ்சல் செய்துள்ள அவர், டிஎம்டிஜி மற்றும் டிஜிட்டல் வேர்ல்ட் அக்விசிஷன் இரண்டும் இணைந்து “ட்ரூத்“ எனும் புதிய சோஷியல் மீடியா நிறுவனம் உருவாக்கப்பட இருக்கிறது.
எனவே “ட்ரூத்“ மூலம் உண்மைகளை பகிர்ந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். அதோடு பெரிய தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு இந்த பக்கத்தில் தக்கப்பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் “ட்ரூத்“ நிறுவனத்தின் சேவை அடுத்த ஆண்டில் துவங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.