மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் டிரம்ப்... உலக அரசியலை விவாதிக்க திட்டம்..!
- IndiaGlitz, [Tuesday,January 14 2020]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடி அண்மையில் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா வர ட்ரம்ப் ஆர்வமாக உள்ளார்.
அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அரசியல் ரீதியாகவும் ட்ரம்ப் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்தியா வருவதற்கான பணிகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் போது ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்கும் என இந்திய எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு வர்த்தகம் சார்ந்த ஒப்பந்தங்களும் ட்ரம்ப் வருகையின்போது மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.