எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.. ஈரானுக்கு தூது விடும் ட்ரம்ப்.
- IndiaGlitz, [Thursday,January 09 2020]
இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம் என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார். காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த ராணுவ தளங்கள் மீது இரானில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மேற்கொண்டு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும், இரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், இரான் தரப்புடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாடும் தங்கள் தற்காப்பு கருதி நடவடிக்கை எடுக்க ஐநா சாசனத்தின் பிரிவு 51 வழிவகை செய்கிறது.இதன் காரணமாகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அந்தக் கடிதத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு தெரிவிக்க அமெரிக்கா எழுதியுள்ளது.மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.