மாநிலங்களவை உறுப்பினராகும் பிரபல நடிகர்… ரசிகர்கள் மகிழ்ச்சி!
- IndiaGlitz, [Wednesday,February 23 2022]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானா மாநிலம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடிகர் பிரகாஷ் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை திடீரென சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜகவை வலுவாக எதிர்க்கும் இவரை பாஜகவிற்கு எதிரான கூட்டணியான தனது டிஆர்எஸ் கட்சியில் இணைத்துக் கொள்ளவும் அக்கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக்குவது குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் சிந்தித்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றன.
முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத் தலைவர் பதவியில் போட்டியிட்டு நடிகர் மோகன்பாபுவின் மகனான விஷ்ணுவிடம் தோல்வியடைந்தார். அந்த வகையில் தெலுங்கு தேசத்தில் இவருக்கு அதிகபடியான ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவை தொடர்ந்து விமர்சித்துவரும் இவரை ஆளும்கட்சி (டிஆர்எஸ்) சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் டிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பண்டி பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கூடவே அக்கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் கேப்டன் லட்சுமி காந்தாராவ், ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து டிஆர்எஸ் கட்சி சார்பாக மாநிலங்களவையில் 3 இடங்கள் காலியாகும் என்பதால் அதில் ஒன்றை நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுளாகவே அரசியலிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கனாவின் டிஆர்எஸ் கட்சி சார்பாக அவர் மாநிலங்களவைக்கு செல்வார் என்றும் கூறப்படும் நிலையில் ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.