அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய த்ரிஷா.. அடுத்தது என்ன படம்?

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா, தற்போது சென்னை திரும்பி உள்ளதாகவும் உடனடியாக ஒரு சில நாட்களில் அவர் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் இருந்து த்ரிஷா சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் டொவினோ தாமஸ் உடன் நடிக்க இருக்கும் மலையாள திரைப்படமான ’ஐடென்டிட்டி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெற இருப்பதாகவும் அப்போது மீண்டும் த்ரிஷா, இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.