த்ரிஷா இல்லன்னா நயன்தாரா விடலை விருந்து

  • IndiaGlitz, [Thursday,September 17 2015]

சிறந்த இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் டார்லிங்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எந்த ஒரு துறையிலும் முதல் முயற்சியைப் போலவே இரண்டாவது முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் சென்னை இளைஞராக நடித்திருக்கும் இந்தப் படம் அதற்கான தேவையை நிறைவேற்றியிருக்கிறதா?

ஜீவா (ஜி.வி.பிரகாஷ்), ரம்யா (ஆனந்தி) மற்றும் அதிதி (மனிஷா) மூவரும் ஒரே நேரத்தில் ஒரே பிரசவ வார்டில் பிறக்கின்றனர். குழந்தைப்பருவ நண்பர்களாக ஒரே குடியிருப்புப் பகுதியில் வளர்கின்றனர். பதின்பருவத்தை அடைகையில் அதிதி வெளியூர் செல்ல ஜீவாவுக்கும் ரம்யாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. சில காதல் சேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் ஜிவா செய்யும் ஒரு தவறால் அவர்கள் காதல் பிரிகிறது.

பிறகு ஜீவாவின் வாழ்வில் அதிதி நுழைய அவர்களுக்கிடையிலான காதலும் சில மோதல்களால் பிரிகிறது. இதையடுத்து கும்பகோணம் செல்லும் ஜீவா அங்கு ரம்யாவை சந்திக்கிறான். அதைத் தொடர்ந்து என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.

படத்தின் கதையை தலைப்பில் சொல்லும் செய்திக்குள் அடக்கிவிடலாம். காதலைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு பெண் போனால் இன்னொரு பெண்ணைத் தேடும் இளைஞனின் கதைதான் இது. இத்தனை லேசான கதைக்கருவுக்கு ஆதிக் ரவிச்சந்தர் ஜாலியான வசனங்களால் நிறைந்த தொய்வற்ற திரைக்கதையை அமைத்திருக்கிறார். அனைத்து வகைகளிலும் இளைஞர்கள் ரசிக்கத்தக்க கேளிக்கை அம்சங்களை சாத்தியமாக்கியிருக்கிறார். இவற்றை நாடும் இளைஞர்களை படம் ஈர்க்கத் தவறாது.

சிறார்களுக்கிடையிலான ஈர்ப்பை விவரிக்கும் தொடக்க காட்சிகள் அழகான ஆச்சரியம். அந்த ஈர்ப்பை எந்த வகையிலும் களங்கப்படுத்தாமல் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

அதை அடுத்து தொடர்பவை அனைத்தும் விடலைகள் மற்றும் அவர்கள் காதல் வாழ்க்கை தொடர்பான துணிச்சலான காட்சிகள். விடலைகளில் காதல் அல்லது பருவ ஈர்ப்பு தொடர்பானவற்றை ஒளிவு மறைவின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். பல இரட்டை அர்த்த வசனங்கள், (நேரடியான மற்றும் மறைமுகமான )காட்சித் துணுக்குகள் ஆகியவை படத்துக்கு வழங்கப்பட்ட ஏ சான்றிதழை நியாயப்படுத்துகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்வோருக்குப் பிடிக்காமல் போகலாம். தவிர இந்தப் படம் சிறுவர்கள் பார்க்கத்தவகை அல்ல.

அதே நேரத்தில் இந்த அம்சங்கள் படத்துக்கு சாதகமானவையும் ஆகும். இளைஞர்களை நோக்கி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அவர்களைக் கவரும் அம்சங்கள் சரியாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக பெண்களை ஆண்களின் பிரச்சனையாகப் பார்க்கும் வசனங்களும் மது அருந்தும் பெண்கள் மீதான விமர்சனங்களும் இளம் ஆண்களை வெகுவாகக் கவர்வதை அரங்கில் எழும் கைதட்டல்களிலும் விசில் சத்தங்களிலும் கேட்க முடிகிறது.

இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க மட்டும் வைப்பதில் அதிக கவனம் குவிவதால் சில லாஜிக் மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன. அவற்றுக்கு மத்தியிலும் ரம்யாவின் காதலை ஜீவா திரும்பப் பெறும் காட்சிகள் அழகாகவும் மனதைத் தொடும் வகையிலும் இருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் காதல், உறவுகள், கன்னித்தன்மை ஆகியவற்றை அணுகும் விதத்தைப் பற்றிப் பேசுகிறது படம். அவற்றை சுவாரஸ்யத்துகாக மட்டுமே பயன்படுத்தி ஆழமாகக் கையாளத் தவறுகிறது. இதனால் பெண்கள் தொடர்பான பொதுப்படுத்தல்கள் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன. இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல் பெண்கள் காதலில் விழுவதும் பிரிவதும் மீண்டும் அதே ஆணுடன் இணைவதும் அத்தனை எளிதாக நிஜத்தில் நடப்பதில்லை.

பெண்கள் மது அருந்துவதை கடுமையாக விமர்சித்து அதனால் ஏற்படக்கூடிய சமுதாய சீரழிவுகளை விவரிக்கும் படம் ஆண்கள் மது அருந்துவதை சகஜமானதாகவும் சில ஆண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதியாகவும் காண்பிக்கிறது. இதனால் மது அருந்துவது பெண்களுக்கு மட்டும்தான் தீங்கானதா என்ற கேள்வி எழுகிறது?

ஜி.வி.பிரகாஷ், நடிகராக நன்கு வளர்ந்திருக்கிறார். ஒரு சென்னைப் பையனை அழகாகக் கண்முன் நிறுத்துகிறார். முக பாவங்களும் வசன உச்சரிப்புகளிலும் ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனந்தியின் கண்களே கதை பேசுகின்றன. நடிப்பதற்கான வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். மனிஷா கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நாயகனின் காதலுக்கு உதவுபவராக மீண்டுமொரு முறை நடித்திருக்கிறார் விடிவி கணேஷ். வழக்கம்போல் அவ்வப்போது சிரிக்கவைக்கிறார். படத்தில் சிறப்பாக செதுக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று சிம்ரனின் ஏற்று நடித்திருக்கும் பாத்திரம். அவர் சிறப்பாக நடித்த குணச்சித்திர வேடங்களில் இதுவும் ஒன்றாக நிலைபெறும். யூகி சேது கிடைத்த வேடத்தை குறையின்றி செய்திருக்கிறார். ஆர்யாவும், ப்ரியா ஆனந்தும் கெளரவத் தோற்றத்தில் வந்து படத்துக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் திறமை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாடல்கள் அனைத்தும் அவை வைக்கப்பட்டுள்ள தருணத்தின் மனநிலையை சரியாகப் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலானவை தாளம்போட வைக்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை.

ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு மற்றும் எல்.ரூபனின் படத்தொகுப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

மொத்தத்தில்இரண்டு மணிநேரத்துக்கு சற்றே அதிகமாக ஓடும் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' விடலைகள் மற்றும் இளைஞர்களுக்கு விருந்தாகவும் பெரியவர்களுக்கும் புனிதவாதிகளுக்கும் கசப்பு மருந்தாகவும் அமைந்திருக்கிறது.

சுவாரஸ்யமாக பொழுதைப் போக்க விரும்புபவர்களை இந்தப் படம் ஏமாற்றாது.

மதிப்பெண்- 2.75/5

More News

'49 ஓ' திரைவிமர்சனம் கவுண்டமணியின் கர்ஜனைக்கு ஒரு 'ஓ'

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நகைச்சுவை அரசர் கவுண்டமணி, ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார். அதுவும் கதாநாயகனாக...இத்தனை ஆண்டுகள் ஓய்வில் இருந்த கவுண்டமணி, ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததில் இருந்தே, இந்த படத்தில் ஏதோ புதுமையாக இருக்கின்றது என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை கவுண்டமணியும், அறி

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்தது

நாய்கள் ஜாக்கிரதை' வெற்றி படத்தை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த

ஷாமிலியின் ரீ-எண்ட்ரி படம் பூஜையுடன் தொடங்கியது

மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தற்போது நாயகியாக மீண்டும் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிறார்...

'தூங்காவனம்' 'Sleepless Nights' படத்தின் ரீமேக் அல்ல. ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கமல், த்ரிஷா,...

'ருத்ரம்மாதேவி' ரிலீஸ் உரிமையை பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம்

பாகுபலி' படத்தை அடுத்து அனுஷ்கா மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று 'ருத்ரம்மாதேவி'. ராணி ருத்ரம்மாதேவியின்....