திரை முன்னோட்டம் சுந்தர் சியின் 'அரண்மனை 2'.

  • IndiaGlitz, [Wednesday,January 27 2016]

கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, ஹன்சிகா, ராய்லட்சுமி, வினய், ஆண்ட்ரியா, சந்தானம் உள்பட பல நட்சத்திரக்கூட்டங்கள் நடித்த 'அரண்மனை' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்தான் கோலிவுட்டில் பல பேய்ப்படங்கள் ரிலீஸ் ஆகியது.


இந்த படத்தின் வெற்றியை அடுத்து சுந்தர் சி இயக்கியுள்ள படம் 'அரண்மனை 2'. இந்த படம் 'அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துவிட்டாலும் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் அனைவருக்கும் இதுவும் ஒரு பேய்ப்படம் என்பது மட்டும் புரிந்துள்ளது.

சாக்லேட் பாய் வேடத்தில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள சித்தார்த் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் அழகான பேய்களாக ஹன்சிகா, த்ரிஷா மற்றும் பூனம் பாஜ்வா ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். த்ரில், சஸ்பென்ஸ் மட்டுமின்றி இந்த படத்தில் கிளாமரும் சம அளவில் இருக்கும் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தில் நடித்திருக்கும் நாயகிகளின் ஸ்டில்களை பார்க்கும்போது இது உறுதியாகிறது. குறிப்பாக சித்தார்த், த்ரிஷாவின் தாய்லாந்து கடற்கரை பாடலில் கிளாமர் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது இந்த படத்திற்கு கிடைத்த பெரிய ப்ளஸ். குறிப்பாக பிரமாண்டமான அம்மன் சிலை பாடல் நிச்சயம் பெண்களிடையே வரவேற்பை பெறும். இந்த பாடலை படமாக்கும்போதே பலர் சாமி வந்து ஆடியதாக இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். இதனால் இந்த பாடல் திரையில் தோன்றும்போது எத்தனை பேர் சாமியாடுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுவதில் இருந்தே இந்த படத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பல திரைப்படங்களை நல்ல முறையில் புரமோஷன் செய்து வெளியிட்டு வெற்றிப்படமாக்கிய அனுபவமுள்ள நிறுவனத்தின் கையில் இந்த படத்தின் ரிலீஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் வெற்றி குறித்து கவலைப்பட தேவையில்லை. மேலும் இந்த படம் சரியாக அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் வெளியாவதால் குடும்ப ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


மேலும் சுந்தர் சி ஒரு ஜனரஞ்சக கமர்ஷியல் இயக்குனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய காட்சிகள் அவருடைய படத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த படத்தையும் அவர் வெற்றி பெறும் வகையில்தான் இயக்கியிருப்பார் என்று நம்புவோம். இருப்பினும் இந்த படம் எப்படி இருக்கின்றது என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் முழுமையாக பார்ப்போம்.