நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமை அடைகிறேன். த்ரிஷாவின் உணர்ச்சிமிகு கடிதம்
- IndiaGlitz, [Sunday,January 15 2017]
கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பயனாளிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர். த்ரிஷாவின் சமூக வலைத்தள பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு அதில் த்ரிஷா கூறாத கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன. இதனால் நடிகை த்ரிஷா தற்காலிகமாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியுள்ளார். மேலும் தான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்றும் விளக்கியிருந்தார். த்ரிஷாவுக்கு கமல் உள்பட பலர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் த்ரிஷா மீண்டும் தனது நிலையை விளக்கி கடிதம் ஒன்றை உணர்ச்சி பெருக்குடன் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விபரம் பின்வருமாறு:
என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லி கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றது. நான் ஜல்லி கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைதளத்தில் என்னுடைய டிவிட்டர் முலமாக தெரிவித்து இருக்கிறேன். நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள் .நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள், என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர் மறை கருத்துக் கொண்டவள் அல்ல.
என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்ப படும் கண்டனங்கள் ,மிகவும் கீழ் தரமாக இருக்கிறது.அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது .இந்த கண்டனங்களை நான் எதிர் கொண்டு , என் நிலையை தெளிவுப் படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப் படும அதே நேரத்தில் சில விஷமிகளால் என்னுடைய டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டது. அந்த விஷமிகள் என் ட்விட்டர் வழியாகவே , நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும்எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம். அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ் ஒர்டையும் மாற்றி விட்டு,அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை , தற்காலிகமாக de activate செய்து விட்டேன்.
நானிந்தக் கடிதத்தை தயார் செய்யும் வேளையில் கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும், எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாரே தான் இருக்கிறேன்.ஆயினும் இந்த சோதனையான கால கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு த்ரிஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.