த்ரிஷாவின் திடீர் அரசியல் பிரவேசம்

  • IndiaGlitz, [Tuesday,February 16 2016]

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷாவும் திடீரென அரசியல்வாதியாக மாறியுள்ளார். ஆனால் அவர் மாறியுள்ளது நிஜ அரசியல்வாதியாக இல்லை. தனுஷூடன் அவர் நடித்து வரும் 'கொடி' படத்திற்காக அரசியல்வாதியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அண்ணன் தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவும் அரசியல்வாதியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் 'ருத்ரா' என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.