சர்வதேச பிரச்சினைக்காக குரல் கொடுத்த த்ரிஷா - சமந்தா.. வேறு யாரெல்லாம் குரல் கொடுத்துருக்காங்க..!
- IndiaGlitz, [Wednesday,May 29 2024]
உள்ளூர் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் சர்வதேச பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நடந்து வரும் நிலையில் த்ரிஷா, சமந்தா உட்பட பல திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுவரை இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பலர் நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் தங்கி இருந்த முகாம் பலத்த சேதம் அடைந்து குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ‛All Eyes On RAFAH' என பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் த்ரிஷா, சமந்தா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் ‛All Eyes On RAFAH' என பதிவு செய்துள்ளார்கள். மேலும் பல பாலிவுட் திரையுலக பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். சோனம் கபூர், வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், மலைக்கா அரோரா, எமி ஜாக்சன், திரிப்தி டிம்ரி, நோரா உட்பட பல பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.