ட்ரிம் செய்யப்பட்ட கமல்ஹாசனின் சாதனைப்படம்: இந்த முறை வெற்றி பெறுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனை படம் ஒன்று கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அதே திரைப்படம் ட்ரிம் செய்யப்பட்டு ரிலீசாக இருப்பதாகவும் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஆளவந்தான்’. இந்த படம் கடந்த 2001ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் அதிக நீளம் உள்பட ஒருசில காரணங்களால் ரிலீஸ் ஆனபோது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால் அதே நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து இந்திய சினிமா அறியாத காலத்திலேயே இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைவரையும் பேச வைத்தது என்பதும், ஸ்பெஷல் எஃபெக்ட் பிரிவில் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆளவந்தான்’ படத்தை இரண்டு மணி நேரமாக ட்ரிம் செய்து வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இன்று கமல்ஹாசன் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று டிரிம் செய்யப்பட்ட ’ஆளவந்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இருப்பதாகவும் புதிய போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் ஒரு மணிநேரம் ட்ரிம் செய்யப்பட்ட ’ஆளவந்தான்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்த இந்த படத்தில் ரவீனா டண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.