தூக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி காரணம்
- IndiaGlitz, [Saturday,August 08 2020]
திருச்சி அருகே 26 வயதே ஆன இளம் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆனந்த் என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு டூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் மனச்சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது. அதன்பின்னர் திடீரென தனது தாயாரின் சேலையை எடுத்து அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்று அங்கு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலையில் அவருடைய பிணத்தை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஆனந்த் தற்கொலை குறித்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
ஆனந்த் அடிக்கடி ஆன்-லைனில் ரம்மி விளையாடி வந்ததாகவும், முதலில் பொழுதுபோக்காக ரம்மி விளையாடி அதன் பின் அதில் மிகவும் ஒன்றிப்போய் தன்னுடைய சொந்தப் பணத்தையும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் விளையாடி உள்ளார். அனைத்து பணமும் ரம்மி விளையாட்டில் பறி போய் விட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாகவே நேற்று முன்தினம் முதல் மனச்சோர்வுடன் இருந்த ஆனந்த் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அலுவலகத்தின் பணத்தை எடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது திருச்சியில் ஒரு போலீஸ்காரர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைதடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.