மலை மீது ஒரு கிமீ பயணம் செய்யும் மாணவ மாணவிகள்! ஆன்லைன் வகுப்பின் பரிதாபங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் இருப்பவர்கள் இன்டர்நெட் உதவியுடன் பார்த்து பாடங்களைப் படித்துக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் வகுப்புகளால் நகரங்களில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
குறிப்பாக திருச்சியில் உள்ள பச்சைமலை அருகில் உள்ள மணலாடு என்ற கிராமத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் இன்டர்நெட் சிக்னலுக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைமீது நடந்து சென்று அங்குள்ள மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு செல்போன் மூலம் இண்டர்நெட் சிக்னலை பெற்று ஆன்லைன் பாடங்களை படித்து வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியில் உள்ள ஒருசில கிராமங்களில் உள்ளவர்களும் ஆன்லைன் படிப்புக்காக ஆபத்தான மலைகளில் ஏறி வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரம் முதல் தங்களது ஆசிரியர்கள் தங்களுக்கு பாடங்களை வீடியோக்கள் மூலம் அனுப்பி வைப்பதாகவும் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்து தாங்கள் படித்து வருவதாகவும் தீபிகா என்ற 12ஆம் வகுப்பு மாணவி கூறியுள்ளார். ஆனால் ஆசிரியர்கள் அனுப்பும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு தங்கள் கிராமத்தில் எந்தவித இன்டர்நெட் வசதியும் இல்லை என்பதால் ஒரு கிலோமீட்டர் தூரம் அந்த மலைமீது நடந்து வந்து இங்கே செல்போன் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்துகொண்டு டவுன்லோட் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் குக்கிராமம் வரை இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திய பின்னரே ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்றும், இல்லையேல் அது நகர மக்களுக்கு மட்டுமே பயன்படும் ஒரு அம்சமாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments