'சிறகடிக்க ஆசை' சீரியலை முந்திய சன் டிவியின் புதிய சீரியல்.. இந்த வார டிஆர்பி நிலவரம்..!
- IndiaGlitz, [Saturday,December 28 2024]
சமீபத்தில் அறிமுகமான புதிய சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் சன் டிவியின் சிங்க பெண்ணே முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து, சன் டிவியின் ’மூன்று முடச்சு தொடர் இரண்டாவது இடத்தையும், கடந்த சில வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த கயல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும், சன் டிவியின் மருமகள் சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இந்த சீரியலுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. டப்பிங் தொடரான ராமாயணம், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், வழக்கம் போல் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்து சன் டிவியின் தொடர்கள் முதல் ஐந்து இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் ஆறாவது இடத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அன்னம் என்ற சீரியல் உள்ளது. எனவே, முதல் ஆறு இடங்களில் சன் டிவி தொடர்கள்தான் முன்னிலை வகிக்கின்றன.
ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. கடந்த பல வாரங்களாக இதே இடத்தில் இருக்கும் இந்த சீரியல், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளதால், அடுத்த வாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மற்றும் 10வது இடத்தில் சன் டிவியின் புதிய சீரியல் ரஞ்சனி இடம் பிடித்துள்ளது.
மொத்தத்தில், அன்னம் மற்றும் ரஞ்சனி ஆகிய இரண்டு சீரியல்கள் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே டாப் 10 ரேட்டிங்கில் இடம் பிடித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.