போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி
- IndiaGlitz, [Friday,January 05 2018]
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். சென்னையில் இன்று காலை குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நேற்று போக்குவரத்து ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று மாலையே திடீரென பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்,
பேருந்துகள் போதிய அளவில் ஓடாததால் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை மட்டுமின்றி, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பு, தொழிலாளர்கள் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை பணியில் அமர்த்தி பேருந்துகளை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.