'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு
- IndiaGlitz, [Tuesday,July 10 2018]
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக அரசியல் ஒருசில கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையே இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக, சமூக வலைத்தளங்களில் இருந்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் நீக்கினர்
இந்த நிலையில் பொதுமக்களை புகை பிடிக்க தூண்டும் வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இருந்ததால் படக்குழுவினர் ரூ.10 கோடி புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விஜய் உள்பட படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய இயக்குனர் டி.ராஜேந்தர், 'தனி மனித ஒழுக்கம் அனைத்து நடிகர்களுக்கும் அவசியம். ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா? புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். புகையிலையை முழுமையாக அரசு தடை செய்ய ஏன் முழு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.