சிம்பு-விஷால் குறித்து டி.ராஜேந்தர் கூறியது என்ன?
- IndiaGlitz, [Friday,April 22 2016]
நடிகர் சங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக சிம்பு சமீபத்தில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சங்கத்தில் இருந்து விலக வேண்டாம் என நடிகை ராதிகா உள்பட பலர் சிம்புவை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்புவுக்கு அறிவுரை கூறும் வகையிலும், விஷாலுக்கும் ஒருசில கருத்துக்களை கூறும் வகையிலும் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் சிறுவயதில் சிம்புவை பள்ளிக்கு சேர்த்ததும் நான் தான், நடிகர் சங்கத்தில் சேர்த்ததும் நான் தான். இந்த சங்கத்திற்காக சிம்பு இளம்பருவத்தில் இருந்தே உழைத்துள்ளார். என்.எஸ்.கே., எம்.ஜி.ஆர், சிவாஜி உள்பட பல கலைஞர்கள் கட்டிக்காத்த பெருமைக்குரியது நடிகர் சங்கம். இத்தகைய நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவை சிம்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதேசமயம் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால் ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. பீப் சாங்கை சிம்பு வெளியிடவில்லை. யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். செய்யாத தப்புக்கு சிம்பு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகர் சங்கம் பாதிக்கப்பட்ட நடிகருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஒதுங்கியிருந்தாலே போதும். எதிர்காலத்திலாவது விஷால், சிம்பு விஷயத்தில் நடந்து கொண்டது போன்று வேறு யாராவது பாதிக்கப்படும்போது நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது' என்று கூறியுள்ளார்.