திருமணத்திற்கு 8 நாள் இருக்கும்போது செல்போனால் பலியான மணப்பெண்
- IndiaGlitz, [Friday,August 23 2019]
தொழில்நுட்பம் வளர வளர ஆபத்துக்களும் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதும் செல்போனில் பேசுவதால் விலைமதிப்பில்லா பல உயிர்கள் பறிபோகின்றன. இந்த நிலையில் திண்டிவனம் அருகே இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த மணப்பெண் ஒருவர் செல்போனால் பலியாகியுள்ளார்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருவீட்டார்களும் திருமணத்திற்கான பணிகளை செய்து கொண்டிருந்த நிலையில் மணப்பெண் ஜான்சிராணி வழக்கம்போல் தான் பணிபுரியும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
ஜான்சிராணி தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு செல்ல சென்னை - திருச்சி ரயில்வே டிராக்கை கடந்து செல்ல வேண்டும். ரயில்வே டிராக்கை அவர் செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஜான்சிராணி சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜான்சிராணி பலியாகியுள்ளது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இன்றைய உலகில் செல்போன் அவசிய தேவை என்றாலும் செல்போனை சாலையில் நடக்கும்போது வாகனங்களில் செல்லும்போதோ பயன்படுத்த கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது