'புஷ்பா 2' படம் பார்க்க வந்த அல்லு அர்ஜுன்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாப பலி..!
- IndiaGlitz, [Thursday,December 05 2024]
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான திரைப்படம் ’புஷ்பா 2’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகியது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் அதிகம் குவிந்ததால், தியேட்டர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த போது, அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் கீழே விழுந்ததாகவும், அவர் நெரிசலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ரேவதி தனது கணவர் மற்றும் மகனுடன் படம் பார்க்க வந்த போது, அல்லு அர்ஜூனனை பார்க்க குவிந்த கூட்டத்தில் தான் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், அவருடைய மகனுக்கும் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாஸ் நடிகர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.