சென்னையை சேர்ந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் என்றவுடன் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. உண்மையான டிராபிக் ராமசாமி அவர்களே இந்த படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டது அந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் தனியொரு மனிதனாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் டிராபிக் ராமசாமி சேவையை கெளரவப்படுத்தும் வகையில் இந்த படம் இருந்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
டிராபிக் ராமசாமி அவர்கள் மனைவி, மகன், மகள், பேரக்குழந்தை என அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் சமூக சேவையே அவரது பிரதான நோக்கம். கண் எதிரே தோன்றும் தவறுகளை தட்டி கேட்கும் அவருக்கு வெற்றி, தோல்வி, அவமானம், பாராட்டு என மாறி மாறி கிடைத்து வருகிறது. சாலையில் எச்சில் துப்பும் நபரையும், காவல் நிலையத்தில் காமலீலை நடத்தும் பெண் இன்ஸ்பெக்டரையும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருகிறார். இதேபோல் மீன்பாடி வண்டி மோதி தன் கண் எதிரே மரணம் அடையும் இளைஞர் ஒருவருக்காக நீதிகேட்டு நீதிமன்றம் செல்கிறார். அப்போதுதான் அதன் பின்னால் இருக்கும் பெரிய மனிதர்கள் குறித்து தெரியவருகிறது. இருப்பினும் மனம் தளறாமல் போராடும் டிராபிக் ராமசாமிக்கு வெற்றி கிடைத்ததா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
டிராபிக் ராமசாமி கேரக்டரில் நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், உண்மையான டிராபிக் ராமசாமியை பிரதிபலிக்க முயற்சி செய்துள்ளார். மனைவி ரோஹினியிடம் கொஞ்சல், கொடுமையை கண்டு பொங்குதல், நீதிமன்றத்தில் ஆவேசம், காமெடி கலந்து வாதாடுதல் என தன்னால் முடிந்த அளவுக்கு கேரக்டருக்கு உயிர் கொடுக்க முயற்சித்துள்ளார்.
எஸ்.ஏ.சியின் மனைவியாக நடித்திருக்கும் ரோஹினியின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பாக உள்ளது. கணவரை மூன்று நாட்களாக காணாமல் துடிக்கும் காட்சியிலும் வீட்டை விட்டு வெளியேறி கடைசி வரை உங்களுடன் உங்க போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறும் காட்சியிலும் கைதட்டல் பெறுகிறார்.
ஆர்.கே.சுரேஷ், பிரகாஷ்ராஜ் இருவரும் சில காட்சிகளே வந்தாலும் மனதை தொடுகின்றனர். மோகன்ராமன், இமான் அண்ணாச்சி, ஆகியோர்களின் நடிப்பு ஓகே. அதேபோல் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பு, சீமான், எஸ்.வி.சேகர், ஆகியோர் தோன்றும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரின் காட்சிகள் சூப்பர். நீதிபதியாக வரும் எஸ்.வி.சேகர், சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறும்போது தியேட்டர் கலகலக்கின்றது ஏன் என்பது அனைவருக்கும் புரியும்
பாலமுரளி பாலுவின் இசையில் இரண்டு பாடல்கள் கதையுடன் ஒன்றி வருவதால் ஓகே ரகத்தில் சேருகிறது. பின்னனி இசையிலும் திருப்தி தருகிறார். குகன் எஸ்.பழனியின் கேமிரா, பிரபாகர் பட்த்தொகுப்பு படத்தின் கதைக்கேற்ப செல்கிறது.
இயக்குனர் விக்கி, டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். டிராபிக் ராமசாமி நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் போராட்டங்களில் ஒன்றைக்கூட இயக்குனர் அழுத்தமாக கூறவில்லை. இந்த படத்தில் டிராபிக் ராமசாமி நடத்தும் போராட்டங்கள் எல்லாமே சீரியஸாக இல்லாமல் காமெடியாக இருப்பதால் மனதை தொட மறுக்கின்றது. திரும்ப திரும்ப டிராபிக் ராமசாமி அடிவாங்கும் காட்சிகள் சலிப்பை தருகிறது.
ஒரு சீரியஸான சமூக போராளியின் படத்தில் குத்துப்பாட்டை வைத்து இயக்குனர் எஸ்.ஏ.சியின் உதவியாளர் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் விக்கி. நீதிமன்றமா? டீக்கடை பெஞ்சா? என்று கூறும் அளவுக்கு நீதிமன்ற வாதாடும் காட்சிகள் கேலிக்கூத்தாக உள்ளது. அதிலும் லிவிங்ஸ்டன் வழக்கறிஞராக நடித்திருக்கும் நடிப்பு சகிக்க முடியவில்லை. மொத்தத்தில் இயக்குனர் டிராபிக் ராமசாமியின் டைட்டிலை தவிர அவரை பற்றிய எந்த விஷயத்தையும் மனதில் பதியும்படி கூறவில்லை என்பது ஒரு பெரிய மைனஸ். மீன்பாடி வண்டிகளின் விபரீதத்தையும் அபாயத்தையும் கூறிய ஒரு விஷயத்திற்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் எஸ்.ஏ.சி, ரோஹினி மற்றும் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய நட்சத்திரங்களின் நடிப்பை ரசிக்க ஒருமுறை பார்க்கலாம்
Comments