இப்படி ஒரு ஹெல்மெட் தேவையா? தூக்கி போட்டு உடைத்த போலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

ஹெல்மெட் என்பது வாகனம் ஓட்டுபவரின் உயிரை காப்பாற்றும் முக்கிய அம்சம் என்பதால் தான் சென்னை ஐகோர்ட், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் போட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்து போலீசார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் தலைக்கவசம் என்பது நம் தலையை காக்கும் கவசம் என்பது புரியாமல் போலீசை ஏமாற்றுவதற்காக ஒருசிலர் ஹெல்மெட் என்ற பெயரில் தரமற்ற பிளாஸ்டிக் ஹெல்மெட்டுக்களை அணிந்து வருகின்றனர். இந்த வகை ஹெல்மெட்டுக்களை போடுவதற்கு போடாமலே இருந்துவிடலாம். இரண்டுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இருக்காது

இந்த நிலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் போடாதவர்களை விட ஹெல்மெட் போட்டவர்களை அவர்களது ஹெல்மெட் தரமானதுதானா? என்று சோதனை செய்தனர். இதில் பலரது ஹெல்மெட்டுக்கள் கீழே விழுந்தாலே உடையும் தன்மை கொண்டது என்று தெரிய வந்ததும் டென்ஷனான போலீசார், ‘இப்படி ஒரு ஹெல்மெட் தேவையா? என தூக்கி போட்டு உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளின் நன்மைக்காகவே போலீசார் இவ்வாறு செய்தாலும் ‘ஹெல்மட் புடுங்கி உடைக்கும் அதிகாரம் யார் தந்தது? ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்றதை விற்பனை செய்த அந்த நிறுவனத்தை உடைக்க செல்ல வேண்டியது தானே’ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாகன ஓட்டிகளை சோதனை செய்வதைவிட போலியான ஹெல்மெட் தயாரிக்கும் கம்பெனிகளை கண்டுபிடித்து இழுத்து மூடலாமே என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது