கொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்!!!
- IndiaGlitz, [Saturday,July 04 2020]
பழைய மருத்துவ முறைகளை சீனா பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த மருத்துவ முறைகளுக்கு உலகம் முழுவதும் தனி அந்தஸ்தும் இருக்கிறது. கொரோனா பரவல் விவகாரத்தில் தற்போது மீண்டும் சீனாவின் பாரம்பரிய மருத்துவம் உலகப் புகழ் வாயந்ததாக மாறிவருகிறது. காரணம் கொரோனா சிகிச்சைக்கு சீனாவின் பாரம்பரிய மருத்துவம் நல்ல பலனைக் கொடுப்பதாக சீன அரசு அந்நாட்டில் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்ட 92 விழுக்காட்டு மக்களுக்கு பாரம்பரிய மருத்துவம் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கட்டுப்படுத்தியதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதனால் கொரேனா சிகிச்சை முறைகளில் சீனாவின் பாரம்பரிய மருத்துவத்திற்கு உலகச் சுகாரதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிகிச்சையில் சீனாவின் பாரம்பரிய மருத்துவம் நல்ல பலனை அளிப்பதாக சீன அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்மறையான கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீனா தனது பாரம்பரிய மருத்துவத்தை உள்ளூரைத் தவிர வெளிநாடுகளில் பிரபலப்படுத்த இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுகிறது என்ற குற்றச்சாட்டை தற்போது சில விஞ்ஞானிகளே முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றில் சீனாவின் பழைய மருத்துவம் முழுமையான பாதுகாப்பை கொடுக்கும் என்ற உறுதியை அளிக்க முடியாது என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் காட்டம் தெரிவித்தும் இருக்கிறது.
ஆனால் கொரோனா சிகிச்சைக்காக தற்போது சீனாவில் 6 மருந்துகள் மிகவும் பரபரப்பாக விற்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சார்ஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்தே சீன பாரம்பரிய மருந்துகளுக்கு அந்நாட்டில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது. ஊடகங்களும் தற்போது சீன பாரம்பரிய மருத்துவத்தை சிறப்புடையதாகவே செய்தி வெளியிடுகின்றன. இதற்கு காரணம் அதிபர் ஜி ஜிங்பிங் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆதரவு கொடுப்பவர் என்றும் விமர்சனம் வைக்கப் படுகின்றன. 13 மூலிகைகள் கலக்கப்பட்ட லியான்ஹீவா குவிங்கர் மருந்து தற்போது கொரோனா சிகிச்சைக்காக சீனாவின் விற்கப்பட்டு வருகிறது. ஜின்ஹீவா குவிங்கர் என்ற மற்றொரு மருந்தில் 12 மூலிகைகள் கலகப்பட்டு அதுவும் விற்பனைக்கு வந்திருக்கிறது.
கொரோனாவிற்கு பாரம்பரிய மருந்துகளை பெரும்பாலான சீனர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மருந்து பிரச்சாரத்தை நேரடியாக அந்நாட்டு அரசே மேற்கொண்டு இருப்பதால் மருந்து விற்பனையும் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் இந்த மருந்துகள் அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்படாதது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப் பட்டு வருகின்றன. எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் கொரோனாவின் அறிகுறிகளைக் குறைப்பதற்கு இந்த மருந்துகள்தான் சிறந்த வழி என்று அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தொடர்ந்து நல்ல கருத்துகளையே மக்களிடம் கூறிவருகின்றன. ஆனால் இப்படி உறுதிப்படுத்தாத மருந்தை அரசே பிரச்சாரம் செய்யக்கூடாது என நேச்சர் ஆய்விதழ் கட்டுரை ஒன்றில் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்கு சீனாவின் பாரம்பரிய மருத்துவம் தற்போது உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கரடியின் பித்தப்பையில் இருந்து மருந்து தயாரித்து அதை மனிதர்களுக்கு பயன்படுத்தியதால் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. அதுமட்டுமில்லாமல் பெரும்பலான சீனா பாரம்பரிய மருத்துவத்தில் நச்சுத் தன்மை இருப்பதாக கடந்த ஆண்டு சீனாவின் தேசிய உணவும் மற்றும் ரசாயன மருந்து கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்தக் கருத்துகளால் பழைய மருத்துவ முறைகளுக்கு அந்நாட்டில் மவுசு குறைந்தே காணப்பட்டது.
தற்போது கொரோனா பரவலில் சீனா மருத்துவம் மீண்டும் களைக் கட்டத் தொடங்கியிருப்பதாக சீனாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. எறும்பு திண்ணிகள் பாரம்பரிய மருத்துவத்திற்கு பெருமளவு வேட்டையாடப் படுவதால் எறும்பு திண்ணிகள் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் எறும்பு திண்ணிகள் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடையும் விதித்தது. இப்படி பல்வேறு எதிர்மறை கருத்துகள் கூறப்பட்டாலும் தொடர்ந்து சீன மருத்துவம் தனது வலுவை கட்டமைத்தே வருகிறது.