ஆற்றுத் தண்ணீரில் கொரோனா வைரஸ்… இந்தியாவை அச்சுறுத்தும் புது சிக்கல்!
- IndiaGlitz, [Saturday,June 19 2021]
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதைத்தவிர அசாம் மாநிலத்திலும் குவஹாத்தி மாநிலத்திலும் உள்ள சில நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் மாதிரி இருப்பதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கொரோனா வைரஸ் மாதிரி இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் மனிதர்களின் உமிழ்நீரில் தொற்றிக்கொண்டு அவை மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி மனித உமிழ்நீரில் தொற்றிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காற்றில் 8 அடி வரை பரவி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் பொருள்களின் மேற்பரப்புகளிலும் இவை கெட்டியாக ஒட்டிக் கொள்ளும் எனவும் மருத்துவர்கள் கூறி இருந்தனர்.
இந்நிலையில் உண்ணும் உணவு, குடிக்கும் நீர் மற்றும் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருக்குமா? என ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் உணவு, நீர், விந்தணுவில் கொரோனா வைரஸ் இல்லை. ஆனால் உடலுறவின்போது கொரோனா வைரஸ் பரவலாம் என மருத்துவர்கள் கூறி இருந்தனர்.
ஆனால் தற்போது அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் கொரோனா வைரஸ்க்கான தடயங்கள் இருக்கிறது என ஐஐடி காந்தி நகர் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இயற்கையான நீரிலும் கொரோனா வைரஸ் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் இது மிகவும் ஆபத்தான அறிகுறி எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக நீரில் கொரோனா வைரஸ் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.