சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி
- IndiaGlitz, [Friday,April 24 2020]
சென்னை, கோவை, மதுரை ஆகீய மாநகராட்சிகளில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகை, பால், காய்கறிகள் போன்ற சில கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளதால் மேற்கண்ட அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து தமிழக முதல்வர் மேலும் கூறியபோது, ‘கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும் என்றும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும், முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி உண்டு என்றும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டும் இயங்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.